Thursday, November 21, 2013

பாரதியார் பாடல்கள் - கண்ணம்மா என் காதலி

பாரதியார் பாடல்கள் - கண்ணம்மா என் காதலி
            

கண்ணம்மா என் காதலி – 1
(காட்சி வியப்பு)

செஞ்சுருட்டி - ஏகதாளம் ரஸங்கள் : சிருங்காரம், அற்புதம் 

சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நக்ஷத் திரங்க ளடீ!                                          1

சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ!
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ!
வாலைக் குமரி யடீ! - கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.                                 2

சாத்திரம் பேசு கிறாய், - கண்ணம்மா!
சாத்திர மேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே - கண்ணம்மா!
சாத்திர முண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ! - இதுபார்,
கன்னத்து முத்த மொன்று!                                   3
             
கண்ணம்மா என் காதலி – 2
       (பின்னே வந்து நின்று கண் மறைத்தல்)

நாதநாமக்கிரியை - ஆதிதாளம் ; சிருங்கார ரஸம் 

மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
          வானையும் கடலினையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
          முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
          நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே
சாலப் பலபலநற் பகற்கனவில்
          தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.           1

ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,
          ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுத் தீண்டி யறிந்தேன்,
          பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்,
ஓங்கிவரு முவகை யூற்றி லறிந்தேன்;
          ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
"வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
          மாய மெவரிடத்தில்?" என்று மொழிந்தேன்.          2

சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே
          திருமித் தழுவி "என்ன செய்தி சொல்" என்றேன்;
"நெரித்த திரைகடலில் என்ன கண்டிட்டாய்?
          நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
          சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே
          பெற்ற நலங்கள் என்ன? பேசுதி" என்றாள்.           3

"நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
          நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
          சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே,
          பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினிலுள் கைவி லக்கியே,
          திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்".         4
கண்ணம்மா என் காதலி - 3
(முகத்திரை களைதல்)

நாதநாமக்கிரியை - ஆதிதாளம் ; சிருங்கார ரஸம் 

தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி! - பெண்கள்
       திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும் - இந்த
       மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும் - துணி
       மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ தில்லை, மன்மதக்கலை - முகச்
       சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ?             1

ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய் - பண்டை
       ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ?
ஓரிரு முறைகண்டு பழகிய பின் - வெறும்
       ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார்? - வலு
       வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ப சப்பிலே - கனி
        கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பேனோ?           2
கண்ணம்மா என் காதலி - 4
(நாணிக் கண் புதைத்தல்)


நாதநாமக்கிரியை - ஆதிதாளம் ; சிருங்கார ரஸம் 

மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை - இவன்
        மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?
சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ? - இங்கு
        செய்யத் தகாதசெய்கை செய்தவ ருண்டோ?
வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன் - நின்றன்
        மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன்.
என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்? - எனக்
        கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா!           1

கன்னி வயதிலுனைக் கண்டதில்லையோ? - கன்னங்
        கன்றிச் சிவக்கமுத்த மிட்ட தில்லையோ!
அன்னிய மாகநம்முள் எண்ணுவதில்லை - இரண்
        டாவியுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ?
பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? - துகில்
        பறித்தவன் கைபறிக்கப் பயங்கொள்வனோ?
என்னைப் புறமெனவுங் கருதுவதோ? - கண்கள்
        இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ?    2

நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும் - சுவை
        நைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?
பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால் - தம்முள்
        பன்னி உபசரணை பேசுவ துண்டோ?
நீட்டுங் கதிர்களோடு நிலவு வந்தே - விண்ணை
        நின்று புகழ்ந்து விட்டுப் பின்மருவுமோ?
மூட்டும் விறகினைச் சோதி கவ்வுங்கால் - அவை
        முன்னுப சாரவகை மொழிந்திடுமோ?                 3

சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திட்டேன்; - அவர்
        சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;
நேற்று முன்னாளில் வந்த உறவன்றடீ! - மிக
        நெடும்பண்டைக் காலமுதல் சேர்ந்து வந்ததாம்.
போற்றுமி ராமனென முன்புதித்தனை, - அங்கு
        பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்;
ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோ ன் - கண்ணன்
        உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்கு நான்.         4

முன்னை மிகப் பழமை இரணியனாம் - எந்தை
        மூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ;
பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன் - ஒளிப்
        பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்;
சொன்னவர் சாத்திரத்தில்மி கவல்லர் காண்; - அவர்
        சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை;
இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்; - இதில்
        ஏதுக்கு நாணமுற்றுக் கண்புதைப்பதே?                5
கண்ணம்மா என் காதலி - 5
(குறிப்பிடம் தவறியது)


செஞ்சுருட்டி - ஆதிதாளம் ; சிருங்கார ரஸம் 

தீர்த்தக் கரையினிலே - தெற்கு மூலையில்
       செண்பகத் தோட்டத்திலே,
பார்த்திருந்தால் வருவேன் - வெண்ணிலாவிலே
       பாங்கியோ டென்று சொன்னாய்.
வார்த்தை தவறிவிட்டாய் - அடி கண்ணம்மா!
       மார்பு துடிக்கு தடீ!
பார்த்த விடத்திலெல்லாம் - உன்னைப்போலவே
       பாவை தெரியு தடீ!                                   1

மேனி கொதிக்கு தடீ! - தலை சுற்றியே
       வேதனை செய்கு தடீ!
வானி லிடத்தை யெல்லாம் - இந்த வெண்ணிலா
       வந்து தழுவுது பார்!
மோனத் திருக்கு தடீ! - இந்த வையகம்
       மூழ்கித் துயிலினிலே.
நானொருவன் மட்டிலும் - பிரி வென்பதோர்
       நரகத் துழலுவதோ?                                  2

கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும்
       காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான்
       அங்கு வருவதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும்
       கூடிக் கிடக்கு தங்கே;
நடுமை யரசி யவள் - எதற் காகவோ
       நாணிக் குலைந்திடுவாள்.                              3

கூடிப் பிரியாமலே - ஓரி ராவெலாம்
       கொஞ்சிக் குலவி யங்கே,
ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை
       ஆயிரங் கோடி முறை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான்
       நல்ல களி யெய்தியே,
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம்
       பண்ணிய தில்லை யடி!                               4

கண்ணம்மா என் காதலி - 6
யோகம்


பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!         1

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
மானுடைய பேரர சே! வாழ்வு நிலையே! கண்ணம்மா!       2

வான் மழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்குப் பாண்டமடி நானுனக்கு
ஞான வொளி வீசுதடி; நங்கை நின்றன் சோதிமுகம்;
ஊனமறு நல்லழகே! ஊறு சுவையே! கண்ணம்மா!           3

வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணுகதி நீ யெனக்குப் பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமிலை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே! கண்ணம்மா!   4

வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்குப் பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே; நின்னழகை யேதுரைப்பேன்?
ஆசை மதுவே, கனியே, அள்ளு சுவையே கண்ணம்மா!      5

காதலடி நீ யெனக்குக் காந்த மடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கிவருந் தீஞ்சுவையே!
நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!              6

நல்லவுயிர், நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேம நிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே! எங்கும் நிறை பொற்சுடரே!
முல்லை நிகர் புன்னகையாய்! மோதுமின்பமே! கண்ணம்மா!  7

தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;
தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஒருருவமாய்ச் சமைந்தாய்! உள்ளமுதே! கண்ணம்மா!        8


No comments:

Post a Comment