Tuesday, November 19, 2013

பாரதிதாசன் பாடல்கள் – 1 (Bharathidasan Poems - 1)

பாரதிதாசன் பாடல்கள் – 1 (Bharathidasan Poems - 1)



 தமிழை என்னுயிர் என்பேன்

கனியிடை ஏறிய சுளையும்  முற்றல் 
கழையிடை ஏறிய சாறும் 
பனிமலர் ஏறிய தேனும்  காய்ச்சுப் 
பாகிடை ஏறிய சுவையும் 
நனிபசு பொழியும் பாலும்  தென்னை 
நல்கிய குளிரிள நீரும் 
இனிய என்பேன் எனினும்  தமிழை 
என்னுயிர் என்பேன் கண்டீர்.



படைத் தமிழ்

இருளினை, வறுமை நோயை 
இடருவேன்; என்னுடல் மேல் 
உருள்கின்ற பகைக்குன்றை 
நான் ஒருவனே உதிர்ப்பேன்; 
நீயோ கருமான்செய் படையின் வீடு; 
நான் அங்கோர் மறவன்! கண்ணற் 
பொருள்தரும் தமிழே! 
நீ ஓர் பூக்காடு; நானோர் தும்பி!


தென்றலுக்கு நன்றி  

கமுகொடு நெடிய தென்னை 
கமழ்கின்ற சந்தனங்கள் 
சமைக்கின்ற பொதிகை அன்னை 
உனைத் தந்தாள்; தமிழைத் தந்தாள்! 
தமிழ் எனக் ககத்தும், தக்க 
தென்றல் நீ புறத்தும் இன்பம் 
அமைவுறச் செய்வதை நான் 
கனவிலும் மறவேன் அன்றோ?



ஒத்துண்ணல்  

இட்டதோர் தாமரைப்பூ 
இதழ் விரித்திருத்தல் போலே 
வட்டமாய் புறாக்கள் கூடி 
இரையுண்ணும்; அவற்றின் வாழ்வில் 
வெட்டில்லை; குத்துமில்லை; 
வேறுவேறு இருந்து அருந்தும் 
கட்டில்லை; கீழ்மேல் என்னும் 
கண்மூடி வழக்கம் இல்லை!



நீலவான் ஆடைக்குள்

நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து, 
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக் 
கோல முழுதும் காட்டிவிட்டால் காதற் 
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? – வானச் 
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்! 
சொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ! 
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக் 
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பிழம்போ!



ஆற்றுநடை

நோய் தீர்ந்தார், வறுமை தீர்ந்தார், 
நூற்றுக்கு நூறு பேரும்! 
ஓய்வின்றிக் கலப்பை தூக்கி 
உழவுப்பண் பாடலானார்! 
சேய்களின் மகிழ்ச்சி கண்டு 
சிலம்படி குலுங்க ஆற்றுத் 
தாய் நடக்கின்றாள், வையம் 
தழைகவே தழைக்க வென்றே!



பாரதி பற்றி பாரதிதாசன்

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு 
செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை! 
குவிக்கும் கவிதைக்குயில்! இந்நாட்டினைக் 
கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு! 
நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா! 
காடு கமழும் கற்பூரச் சொற்கோ! 
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்! 
திறம்பட வந்த மறவன், புதிய 
அறம்பாட வந்த அறிஞன், நாட்டிற் 
படரும் சாதிப்படைக்கு மருந்து! 
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்! 
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்! 
என்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்! 
தமிழால், பாரதி தகுதி பெற்றதும் 
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும் 
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்.



அழகின் சிரிப்பு

சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்; 
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து 
நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில் 
நாடகத்தைச் செய்கின்றாள்! அடடே, செந்தோள் 
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் 
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய் 
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என் 
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!



திருப்பள்ளி யெழுச்சி

நற்பெரு மார்கழி மாதமோர் காலை 
நமதுநற் பாரதி யாரோடு நாங்கள் 
பொற்பு மிகும்மடு நீரினில் ஆடிடப் 
போகும் வழியினில் நண்பர் ஒருவரைப் 
பெற்ற முதுவய(து) அன்னையார் ஐயரே 
பீடு /தரும்"திருப்/பள்ளி/யெழுச்சி"தான்/ 
சொற்றிறத்தோடுநீர் பாடித் தருகெனத் 
தூய்மைக் கவிஞரும் சென்றனர் ஒப்பியே 

நீல மணியிருட் காலை அமைதியில் 
நெஞ்சு குளிரும் நெடுமரச் சாலையின் 
கோல நடையிற் குதிக்கும் மகிழ்ச்சியால், 
கோரி உடன்வரும் நண்பர்கள் மத்தியில், 
காலை மலரக் கவிதை மலர்ந்தது 
ககன முழுமையும் தேனலை பாய்ந்தது 
ஞானப் பொழுது புலர்ந்த தென் றார்ந்த 
நல்ல தமிழ்க்கவி நாமடைந் தோமே. (6:2)



புது நாளினை எண்ணி உழைப்போம் 

சும்மா கெடந்த நிலத்தைக் கொத்திச் 
சோம்பலில்லாமே ஏர் நடத்தி 
கம்மாக் கரையை ஒசத்திக்கட்டி 
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி 
சம்பாப் பயிரைப் புடுங்கி நட்டுத் 
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு 

நெல்லு வெளைஞ்சிருக்கு - வரப்பும் 
உள்ளே மறைஞ்சிருக்கு 

மண்ணைக் கிளறிக் குழியமைச்சு 
வாழைக் கன்னுகளை ஊடாலே வச்சு 
தண்ணி பெற அக்களை பறிச்சுச் 
சந்திர சூரியர் காண ஒழைச்சு 
ஒண்ணுக்கு பத்தாக் கிளைவெடிச்சு 
கண்ணுக் கழகா நிண்ணு தழைச்சு 

இலை விரிஞ்சிருக்கு - காய்க் 
குலை சரிஞ்சிருக்கு 

பெண்: 

வாழை நிலைக்குது சோலை தழைக்குது 
ஏழைகளுக்கதில் என்ன கிடைக்குது? 

கூழைக் குடிக்குது; நாளைக் கழிக்குது 
ஓலைக் குடிசையில் ஒட்டிக் கிடக்குது 
காடு வெளைஞ்சென்ன மச்சான் - உழைப்போர்க்கு 
கையுங்காலுந்தானே மிச்சம்? 

ஆண்: 

நாடு செழிச்சிட மாடா ஒழைச்சவன் 
நாத்துப் பறிச்சவன், ஏத்தம் எறைச்சவன் 
மூடாத மேனியும் ஓடா எளச்சவன் 
போடா விதைகளும் போட்டு வளர்த்தவன் 
அரை வயித்து கஞ்சி குடிக்கிறான் - சிலநாள் 
அதுவுங் கிடைக்காமத் துடிக்கிறான் 

பெண்: 

மாடா உழைச்சவன் வீட்டினிலே - பசி 
வந்திடக் காரணம் என்ன மச்சான்? 

ஆண்: 

அவன் தேடிய செல்வங்கள் சீமான் வீட்டினிலே 
சேர்ந்ததினால் வந்த தொல்லையடி 

பெண்: 

பஞ்சைப் பரம்பரை வாழ்வதற்கு - இனிப் 
பண்ண வேண்டியது என்ன மச்சான்? 

ஆண்: 

தினம்- 
கெஞ்சிக் கிடப்பதில் பஞ்சந் தெளியாது 
தஞ்சம் துணிஞ்சிட வேணுமடி 

பெண்: 

சிறும் புயலால் மெலிந்தவருக்குச் - சர்க்கார் 
செஞ்ச உதவிகள் என்ன மச்சான்? 

ஆண்: 

அங்கு- 
நாளும் பிணத்தைப் புதைப்பதற்கு - நம்ம 
நாணய சர்க்கார் உதவுமடி 

பெண்: 

தங்கவும் வீடின்றித் திங்கவும் சோறின்றித் 
தத்தளிப்போர்கெதி என்ன மச்சான்? 

ஆண்: 

நாட்டில்- 
எங்கும் தொழிலாளர் கூட்டமடி - அவர் 
பங்காளி போன்றோரைக் காப்பாரடி 

பெண்: 

ஏழைகள் ஒன்றாய் இணைந்து விட்டால் - இங்கு 
எஞ்சியுள்ளோர் நிலை என்ன மச்சான்? 

ஆண்: 

சில- 
பேழை வயிற்றுப் பெருச்சாளிகள் - எதிர் 
காலத்தை எண்ணித் தெளிவாரடி 

பெண்: 

நாளை விடிஞ்சாப் பெரும் பொங்கல் - அதில் 
நாமும் கலந்திட வேணும் மச்சான் 

ஆண்: 

மிக- 
நல்லது வள்ளி கலந்திடுவோம் - புது 
நாளினை எண்ணி வணங்கிடுவோம் 

இருவர்: 

வல்லமையாலே வளம் பெறுவோம் - பசித் 
தொல்லை அகலத் தொழில் புரிவோம்!

No comments:

Post a Comment